வடக்கு கடற்கரை பகுதியில் போதை பொருள் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 9 கிலோ மெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் திரு.அன்பு, அறிவுரையின்படி, வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யா பாரதி வழிகாட்டுதலின் பேரில், பூக்கடை காவல் மாவட்டம் துணை ஆணையாளர் ஆல்பர்ட் ஜான் கண்காணிப்பில் துறைமுகம் சரக உதவி ஆணையாளர் வீரகுமார் மேற்பார்வையில், வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசிங் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மகேந்திரகுமார் மற்றும் முதல் நிலை காவலர்கள் விணு, காவலர் கெளரிசங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நேற்று (23.03.2023) மாலை வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தெரு, மூர் தெரு சந்திப்பில் இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமான பிரவுன் நிற கைப்பை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்னும் போதை பொருளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைபொருளை விற்பனைக்காக வைத்திருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35), சந்திரசேகர் (42) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள், மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் காவல் குழுவினரின் விசாரணையின் மேற்படி 2 நபர்களும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைபொருளை அர்ஜீன் என்பவரின் மூலமாக மணிப்பூர் மாநிலத்திலிருந்து வாங்கி வந்து, சென்னையில் செங்குன்றம் மண்ணடி ஆகிய பகுதிகளில், இளைஞர்களுக்கும் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய அர்ஜீன் என்ற தலைமறைவு குற்றவாளியை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் ராஜ்குமார் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும், விசாரணைக்குப்பின்னர் இன்று (24.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.