9 நகரங்களில் போலி வங்கி நடத்திய கும்பல் கைது * சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீஸ் படைக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
சென்னை, நவ. 23–
சென்னை உள்பட 9 நகரங்களில் போலி வங்கி நடத்திய மோசடி கும்பலை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
உதவிக்கமிஷனர் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ்
பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் அளித்த புகார் மனுவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில் போலியான வங்கி இயங்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மீது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் வங்கிமோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உதவிக்கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில், எஸ்ஐக்கள் சரவணன், பிரேம்குமார், தலைமை காவலர்கள் ஸ்டாலின் ஜோஸ், மகேஷ், காவலர்கள் மோகன், கவியரசன், சதிஷ் மற்றும் பெண் காவலர் கிரிஜா ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். அம்பத்தூர், லேடான் தெரு, VGN Brent Park என்ற இடத்தில் இயங்கி வந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
உதவி ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் பிரேம்குமார்
பாரத ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலிச் சான்றிதழ் தயாரித்து, சென்னை உள்பட 9 நகரங்களில் இவ்வங்கியின் கிளைகளை துவக்கி, பொதுமக்களின் சேமிப்பு மற்றும் வைப்புத் தொகைகளை பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து போலியான வங்கியை துவக்கிய அதன் தலைவர் சந்திரபோஸ் என்ப வரை போலீசார் கடந்த 5ம் தேதியன்று கைது செய்தனர். அவரிடமிருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் உட்பட பொருட்கள் மற்றும் 1 பென்ஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி வங்கியின் இருப்பில் இருந்த ரூ. 56 லட்சத்து 65 ஆயிரத்து 336- முடக்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவிக்கமிஷனர் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு எஸ்ஐ செல்வராஜ் மற்றும் வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவலர் ஏழுமலை ஆகியோரை இன்று (23.11.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் மகேஸ்வரி, மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் நாகஜோதி, மீனா, கிரண் ஸ்ருதி ஆகியோர் உடனிருந்தனர்.