Take a fresh look at your lifestyle.

8 பவுன் தங்கத்தை திருடிச் சென்ற வீட்டு வேலைக்காரியை 12 மணி நேரத்தில் கைது செய்த தாழம்பூர் போலீசார்

113

மயக்கமாத்திரை கொடுத்து 8 பவுன் தங்க நகையை அபேஸ் செய்து சென்ற வீட்டு வேலை க்காரியை சென்னை தாழம்பூர் போலீசார் 12 மணிநேரத்தில் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த தாழம்பூர் எல் அண்ட் டி குடியிருப்பில் வசித்து வருபவர் திருமூர்த்தி. இவரது தனது வயதான மாமியார் ராஜலட்சுமி (62)யை கவனித்துக் கொள்வதற்கு சென்னை, கேகே நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். திருமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். மாமியார் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக
இருந்தார். அதனை பயன்படுத்திக் கொண்ட வேலைக்காரி விஜயலட்சுமி, ராஜலட்சுமிக்கு அதிக அளவில் நீரிழிவு மாத்திரைகளை கொடுத்து அவரை மயக்கமடைய செய்து அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க வளையல்களை திருடிக் கொண்டு தப்பியோடி விட்டார். இது தொடர்பாக தாழம்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாழம்பூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சிறுசேரி பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த விஜயலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 பவுன் தங்க நகையை மீட்டனர். வழக்குப்பதிவு செய்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் வேலு உள்ளிட்ட தனிப்படையினரை தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.

கமிஷனர் அமல்ராஜ் அறிவுரை

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் தனியாக தங்கள் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு கவனிப்பாளர்களை ஏற்பாடு செய்யும் முன்பு அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என அருகில் உள்ள காவல் நிலையம் மூலம் அறிந்து பணிக்கு நியமனம் செய்யவேண்டும். கவனிப்பாளர்கள் பற்றிய தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.