திருவண்ணாமலை மாவட்டம் – ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6-வது மற்றும் 7வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கண்டெய்னரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய்.72,79,000 பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர். அது தொடர்பாக தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மேற்பார்வையில், காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன்,
மற்றும் கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர விசாரணையில், இந்தச் சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர், கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 5,00,000- பணத்தையும், இரண்டு கார்களையும் கைப்பற்றிய நிலையில் கடந்த 14.03.2023 தேதி இவ்வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாவட்டத்தைச் சேர்ந்த சிராஜுதின் (50) என்பவரை கர்நாடகா மாநில எல்லையருகே தனிப்படையினர் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் 15ம் தேதியன்று 7வது குற்றவாளி ஹரியானாவைச் சேர்ந்த வாஹித் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் போலீசார் கைது செய்து விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.