புதுடெல்லியில் 7 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சரின் வாக்குறுதி ஏற்று மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். லக்னோவில் நடக்கும் பயிற்சி முகாமில் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளிடம் அத்து மீறி நடக்கும் போக்கு சில ஆண்டுகளாக தொடருகிறது. எதிர்த்து கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பிரிஜ் பூஷனை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று அவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சாக் ஷி மாலிக், வினேஷ்போகத் ஆகியோர் நேற்று இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்து பேசினர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய முதற்கட்ட பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தைத் தொடரப் போவதாக வீரர்கள் அறிவித்தனர். இதனிடையே நேற்று மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வீரர், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
கூட்டத்தின் முடிவில் வீராங்கனைகளுடன் செய்தியா ளர்களைச் சந்தித்தார் அமைச்சர் அனுராக் தாக்குர். அப்போது இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் ஒதுங்கி இருப்பார் என்று அனுராக் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வீராங்கனைகள் அறிவித்தனர். தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக அனுராக் தாக்குர் அறிவித்தார் மேலும் நான்கு வாரங்களில் நீதி வெல்லும் என்று உறுதி யளித்தார்.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 7 பேர் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
மல்யுத்த வீரர்கள் தரப்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், ‘பிரிஜ் பூஷனால் இளம் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இந்த விவகாரம் குறித்து கமிட்டி அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று அதில் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் மல்யுத்த வீரர் யோகே ஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, அலக்னந்தா அசோக், சதேவ் யாதவ் மற்றும் இரு வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். மேரி கோம் தலைமையில் அமைக் கப்பட்டுள்ள இந்த குழு, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இருக் கிறது. விசாரணை முடிவடையும் வரை, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தினசரி பணிகளைக் கவனிக்கத் தனியாக புது குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.