சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் நடத்திய அதிரடி ரெய்டில் 281 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘ மூலம் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை நகரில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை போலீசார் 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 281.2 கிலோ குட்கா, 218.48 கிலோ மாவா மற்றும் மாவா தயாரிக்கும் மூலப்பொருட்கள், 4 செல்போன்கள், ரொக்கம் ரூ. 5,745, 1 ஆட்டோ, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிடும்படியாக சென்னை ராயபுரம் போலீசார் கடந்த 27ம் தேதியன்று அதிகாலை நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா சாக்லேட் மற்றும் குட்கா பாக் கெட்டுகள் என போதை வஸ்துக்கள் கடத்தி வந்த ராயபுரம் கண்ணன் (36), கவுதம் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பெரியமேடு கிடங் கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை பதுக்கி வைத்திருந்த சவுகார்பேட்டை சந்தோஷ்குமார் (45), பிரஜாபதி (36) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களது கிடங்கிலிருந்து மொத்தம் 170 கிலோ ஹான்ஸ், 12 கிலோ கூலிப், 30 கிலோ எம்.டி.எம். 8 கிலோ விமல் என மொத்தம் 220 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 1 கிலோ மாவா, 4 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல2 யானைக்கவுனி போலீசார் வால்டாக்ஸ் ரோடு, பார்சல் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த Mahendra Supro லோடு வாகனத்தை சோதனை செய்த போது அதில் இருந்து 276 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக மாதவரம் ரன்வீர்குமார் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 216 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப்பொருட்கள் மற்றும் 1 Mahendra Supro லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஆர்.கே நகர் போலீசார் 29.12.2022 அன்று காலை தண்டையார்பேட்டை, கெனால் ரோட்டில் ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 44.75 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதனைக் கடத்தி வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (44) என்பவரை கைது செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.