Take a fresh look at your lifestyle.

7 நாள் ரெய்டில் 430 கிலோ குட்கா சிக்கியது: 139 வழக்குகளில் 143 பேர் கைது

in 7 days 439 kg gutka seazed in chennai

93

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 493 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 62.2 கிலோ மாவா, ரொக்கம் ரூ.4,000/-, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 31.07.2022 முதல் 06.08.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 493 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 62.2 கிலோ மாவா, ரொக்கம் ரூ.4,000/-, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 இலகுரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 04.08.2022 அன்று காலை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் அருகே கண்காணித்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்திலிருந்து 3 நபர்கள் பார்சல்களை லோடு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் காவல் குழுவினர் விசாரணை செய்து பார்சல்களை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் இருந்ததும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மேற்படி குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதன் பேரில் சட்டவிரோதமாக குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த மாதவரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (57), ராமகிருஷ்ணா (35), பாபு (35) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள் மற்றும் 1 ஆம்னி பேருந்து மற்றும் 1 லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 04.08.2022 காலை, மாம்பலம், நடேசன் தெருவிலுள்ள ஒரு கூல்பார் கடையில் கண்காணித்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த மற்றும் விநியோகம் செய்த ராஜேந்திரன், சஜுமோன், ரம்யாவதி ஆகிய 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 36 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், ரெமோ, விமல், வி1 ஆகிய குட்கா பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.4,000- பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 04.08.2022 காலை, பிராட்வே, புனித சேவியர் தெரு மற்றும் பிடாரியார் கோயில் தெரு சந்திப்பு அருகே கண்காணித்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், இருசக்கர வாகனத்தில் மாவா எடுத்து வந்த சென்னை கொத்தவால் சாவடியைச் சேர்ந்த விபின்குமார் பாண்டே, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42.5 கிலோ எடை கொண்ட மாவா மற்றும் மாவா தயாரிக்கும் மூலப்பொருட்களான ஜர்தா, சீவல் பாக்கு, 1 இருசக்கர வாகனம், 2 மிக்சி ஜார் மற்றும் 2 எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.