சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த 7 நாட்கள் நடந்த அதிரடி ரெய்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்திய 129 குற்றவாளிள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகளை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 25.03.2022 முதல் 31.03.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 77. 2 கிலோ கஞ்சா, 4,658 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் குறிப்பிடும்படியாக மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 30.03.2022 அதிகாலை சுமார் 1.30 மணிக்கு மதுரவாயல் பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்தனர். அப்போது, அங்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த பிரபாகரன் (எ) தக்காளி பிரபா (24) என்பது தெரியவந்தது. அந்த நபரை கைது செய்தனர்.
தக்காளி பிரபா அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் மதுரவாயலைச் சேர்ந்த அருண் (எ) கில்லி அருண் (27), ஆழ்வார்திருநகர் ஆனந்த் (எ) கோழிபாபு (25), நெற்குன்றம் பூங்காவணம் (27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21.3 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல கிண்டி போலீசார் கடந்த 25.03.2022 அன்று மதியம், கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணித்தனர். அப்போத சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த மதுரவாயலைச் சேர்ந்த மணிகண்டன் (25), திநகர் சதிஷ் (30), ரஞ்சித்குமார் (28) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,000 டைடல் (Tydol) மாத்திரைகள், 690 நைட்ரவிட் (Nitravet) மாத்திரைகள், 160 ரதிக் (Radik) மாத்திரைகள், 130 டபால் (Tapal) மாத்திரைகள் என மொத்தம் 2,980 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கொடுங்கையூர் போலீசார் கடந்த 29ம் தேதியன்று அன்று இரவு கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவஹர் தெருவில் பைக் மற்றும் ஆட்டோவில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த திருவொற்றியூர் பிரபு (35), கொடுங்கையூர், ஜாபர் (29), கொளத்தூர் சூர்யா (25) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 428 நைட்ரவிட் மாத்திரைகள் மற்றும் 150 டைடல் மாத்திரைகள் என மொத்தம் 578 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல கோடம்பாக்கம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த கிஷோர், கிஷோர்குமார், பூங்குன்றன், முத்துபாண்டி, கோகுலன், ராஜலஷ்மி (எ) மித்ரா ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7,125 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 லேப்டாப், 1 ஐபேட், 9 செல்போன்கள், ரொக்கம் ரூ.4,41,300/- மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதை கும்பலுக்கு உடல்வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் விநியோகம் செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் யாதவ் (24) என்ற மருந்து கடை உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தரமணி போலீசார் கடந்த 25.03.2022 காலை சுமார் 10 மணியளவில் தரமணி, கனகம் சாலை, பிள்ளையார் கோயில் ரேஷன் கடை அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த திரிபுராவைச் சேர்ந்த ரட்டன் டெபர்மா, சமீர் டெபர்மா, அனர் உசைன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் போலீசார் 26.03.2022 அன்று நமச்சிவாயபுரம் ரயில்வே பாலத்தின் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்ற பெருங்களத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (எ) கண்ணன் (39), முகமது ஜான் (40), இபுராஹிம் பாட்ஷா ஆகிய 3 நபர்களை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.