Take a fresh look at your lifestyle.

7 நாட்களில் சிக்கிய 99 பேர்: கமிஷனர் சங்கர்ஜிவால் நடத்திய அதிரடி குட்கா வேட்டை

80

சென்னை நகரில் குட்கா கடத்தல் வழக்கில் கடந்த 7 நாட்களில் 99 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டு சென்னை நகர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் சென்னை நகரில் அந்தந்த துணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் போலீசார் குட்கா வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13.11.2022 முதல் 19.11.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 99 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 134 கிலோ 722 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 75 கிலோ 17 கிராம் மாவா, ரொக்கம் ரூ.1,45,090/-, 1 செல்போன் 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடும்படியாக சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்

குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 13.11.2022 அன்று ஆர்.கே.நகர் பகுதியில் கண்காணித்து குட்கா, புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீமந்த் ஜலானி (29) த/பெ.பிஸ்நுதா ஜலானி, நேதாஜிநகர், தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 32 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 14.11.2022 அன்று கொளத்தூர், செங்குன்றம் சாலையிலுள்ள டீக்கடையில் கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா, மாவா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த மேற்படி டீக்கடையின் உரிமையாளர் கொளத்தூரைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் (52) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிலோ மாவா, 50 கிலோ சீவல் பாக்கு, 1 செல்போன், 1 இருசக்கர வாகனம், மற்றும் பணம் ரூ.1,45,090- பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், யானைக்கவுனி போலீசார் ஆட்டோவில் குட்கா, கடத்திச் செல்ல முயன்ற ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 82 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
******