60 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன சாமி சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு: சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி
idols traced in amerika
சென்னை, ஜுன். 15–
60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சாமிசிலைகள் அமெரிக்கா அருங்காட்சியகத்தல் வைக்கப்பட்டிருப்பதை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தங்களது புலனாய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில் சிவகுருநாத சுவாமி கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்த சிலைகள் திருடப்பட்டிருப்பதாகவும், அதற்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நாராயணசாமி என்பவர் தமிழக சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவில் புகார் அளித்தார். அது தொடர்பாக சிலை திருட்டு தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருடுபோன சிவகுருநாதர் சுவாமி திருக்கோவில் சிலைகளின் புகைப்படங்கள் புதுச்சேரி IFP- யில் இருந்து பெறப்பட்டு தற்போது கோவிலில் உள்ள சிலைகளின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகளின் புகைப்படங்கள் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது.
எனவே பழங்கால சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகளை கடத்தல்காரர்கள் கோவில் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து இந்த புராதன சிலைகளை திருடி அதற்கு பதிலாக போலியான சிலைகளை மாற்றி வைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பூர்வாங்க விசாரணையில் களவு போன சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளனவா என்று வெளிநாட்டு அருங்காட்சியகளின் இணையதள பக்கங்களில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சிவகுருநாதர் சுவாமி கோவிலில் இருந்து களவு போன சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து இந்த அருங்காட்சியக சிலைகளின் புகைப்படத்தை தனிப்படையினர் பதிவிறக்கம் செய்தனர். அவற்றை புதுச்சேரி IFP இல் இருந்து பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது மேற்படி அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகள் சிவகுருநாதர் சுவாமி கோவிலில் இருந்து களவாடப்பட்ட சிலைகள் தான் என்று உறுதியானது. அது தொடர்பாக சிலைத்திருட்டு தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் களவு போன மேற்படி சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சோமாஸ்கந்தர் சிலையானது 10ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனவும் ராஜராஜ சோழனின் பாட்டியான செம்பியன் மாதேவி அமைத்த செப்பு கலைக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவை சேர்ந்த நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.