மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தினார். சிறப்பு மிக்க மருத்துவர்களால் பல்வேறு வகையான நீண்ட நாள் ஆராய்ச்சிகளுக்கு பிறகு பொடுகு நீக்கி கூந்தல் தைலம், பொடுகு நீக்கி சாம்பூ, மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் பிளஸ், மூலிகை சோப்பு என்கின்ற இந்த 6 வகையான அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
டாம்கால் என்று சொல்லப்படும் தமிழ்நாடு மூலிகை மற்றும் மருந்து கழகம் ஏற்கனவே 175 வகையான மருந்துகளை தயாரித்து விநியோகித்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற மருந்துகளாக அவைகள் இன்றைக்கு பயனளித்துக்கொண்டிருக்கிறது. 87 வகையான சித்தா மருந்துகள், 43 வகையான ஆயுர்வேதா மருந்துகள், 21 வகையான யுனானி மருந்துகள், 11 வகையான கால்நடை மருந்துகள் என ஆகமொத்தம் 175 மருந்துகள் தயாரிக்கப்பட்டு இன்று பொதுமக்களிடையே பெரிய அளவிலான வரவேற்பு இருந்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஒரு அங்கமான டாம்கால் நிறுவனத்தின் இந்த தயாரிப்புகள் ஏற்கனவே பிரசித்தி பெற்றிருந்த நிலையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே கடந்த நிதி நிலை அறிக்கையின் போது 11 வகையான அழகு சாதனப் பொருட்கள் டாம்கால் அமைப்பின் சார்பில் வெளிக்கொணரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.
கடந்த நிதிநிலை அறிக்கையில் சொன்ன 11 வகைகளில் மீதம் இருக்கின்ற மூலிகை சன் ஸ்கிரின் லோசன், மூலிகை பூஞ்சை வலி நிவாரண கிரிம், மூலிகை வலி நிவாரண கிரிம், செறிவூட்டப்பட்ட கூந்தல் தைலம், மூலிகை ஹேர் டை போன்றவைகள் விரைவில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்ட்டிருக்கின்றன.
இந்த அழகு சாதனப் பொருட்களின் தேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும், காரணம் இதே மாதிரியான மூலிகைப் பொருட்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்கள் வெளிச் சந்தையில் தமிழ்நாடு அரசின் சார்பில், டாம்கால் நிறுவனத்தின் சார்பில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற விலையை காட்டிலும் 3 மடங்கு அளவிற்கு அதிக விலையுடையதாக இருக்கும்.
அதோடு மட்டுமல்லாது தரம் மாதிரியான விவகாரங்களில் டாம்கால் இன்றைக்கு மிக நேர்த்தியாக இருக்கும் என்கின்ற வகையில் இந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பொது மக்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த துறையின் சார்பில் ஏற்கனவே பெருந்தொற்று காலத்தில் 1.5 லட்சம் நிலவேம்பு குடிநீர், 4.5 லட்சம் கபசுர குடிநீர் விநியோகம் போன்றவைகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டு பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது.எனவே அந்த வகையில் டாம்கால் நிறுவனத்தின் சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே கருவுற்ற தாய்மார்களின் நலன் காப்பதற்கு 11 வகையான மருந்துகள் மகப்பேறு சஞ்சீவி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவ மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.