Take a fresh look at your lifestyle.

6–2 கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

87

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ஈரானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 6 கோல்கள் போட்டு அபாரமாக வெற்றி பெற்றது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று அல் ரையானில் உள்ள கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, ஈரானை ( பி பிரிவு) எதிர்கொண்டது. எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்து வீரர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். 20-வது நிமிடத்தில் ஈரான் அணியின் முன்னணி கோல் கீப்பர் அலிரெஜா பெரன்வன்டுக்கு சக வீரருடன் மோதியதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் ஸ்டிரெச்சரில் வெளியே அழைத்து செல்லப்பட்டார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு பதிலாக ஹூசைன் ஹூசைனி கோல் கீப்பிங் பணியை கவனித்தார்.

32-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து இங்கிலாந்தின் டிரிப்பியர் தூக்கியடித்த பந்தை சக வீரர் மேகரே தலையால் முட்டி திருப்பினார். துரதிர்ஷ்டவசமாக பந்து கம்பத்தில் பட்டு நழுவிப்போனது. ஆனாலும் அடுத்த 3 நிமிடங்களில் இங்கிலாந்து கோல் கணக்கை தொடங்கியது. ஈரானின் தடுப்பு அரணை உடைத்து இடது பக்கத்தில் இருந்து லுக் ஷா தட்டிவிட்ட பந்தை இங்கிலாந்தின் ஜூட் பெலிங்கம் தலையால் முட்டி கோல் போட்டார். 19 வயதான பெலிங்கம் அடித்த முதல் சர்வதேச கோல் இதுவாகும். இதைத் தொடர்ந்து புகாயோ சகா(43-வது நிமிடம்), ரஹீம் ஸ்டெர்லிங் (45-வது நிமிடம்) ஆகியோரும் கோல் அடிக்க முதல் பாதியில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியிலும் இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி எதிரணியை திணறடித்தனர். பந்து பெரும்பாலும் இவர்கள் பக்கமே (78 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. 62-வது நிமிடத்தில் புகாயோ சகா மேலும் ஒரு கோல் போட்டார். தொடர்ந்து போராடிய ஈரானுக்கு 65-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் மேதி தரேமி கோல் அடித்தார். ஆனாலும் இன்னொரு பக்கம் இங்கிலாந்தின் கோல் ஜாலம் நிற்கவில்லை. 71-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் மார்கஸ் ராஷ்போர்டு, 89-வது நிமிடத்தில் ஜாக் கிரியாலிஸ் ஆகியோரும் தங்கள் பெயரை கோல் பட்டியலில் இணைத்துக் கொண்டார். ஆட்டம் முடியும் தருவாயில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஈரானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை மேதி தரேமி கோலாக்கி ஆறுதல் தேடிக் கொண்டார் .

முடிவில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்த உலக கோப்பை தொடரை அட்டகாசமாக தொடங்கி இருக்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து ஒரு ஆட்டத்தில் 5-க்கு மேல் கோல் அடிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2018-ம் ஆண்டு உலக கோப்பையில் பனாமாவை 6- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.