Take a fresh look at your lifestyle.

பிளஸ்2 தேர்வு எழுத வராத 50 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

48

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 3 ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார். பரீட்சை எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

‘‘பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை. வைரஸ் தொற்று காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு சூழல் ஏற்படவில்லை. இருப்பினும் வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். பிளஸ் 2 தேர்வில் 5.6 சதவீத மாணவர்கள் மொழித் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்களில் 38 ஆயிரம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆவர். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் தேர்வு எழுதவில்லை. மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது.

மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11ம் வகுப்பு 12ம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அம்மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். தேர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தி பெற்றோர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறோம். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அதற்கான காரணத்தை அறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு மாணவர்கள் நடத்தையில் ஏற்பட்ட மாற்றமும் தேர்வு எழுதாதற்கு காரணமாக உள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை அறிய வரும் அதிகாரிகளுடன் பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுத தவறியுள்ளனர். அது தொடர்பாக கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.