சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10வது நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை முவரசன்பேட்டை குளத்தில் நடைபெற்றது. அப்போது 25க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் சுவாமியை நீராட்டும் நிகழ்விற்காக குளத்தில் இறங்கி உள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அர்ச்சகர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அர்ச்சகர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சூர்யா (வயது-22), பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22), யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகியோரின் அடையாளம் தெரிந்தது. திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்