5 ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் இணைந்து யோகா பயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், கமிஷனர் சங்கர்ஜிவால்
சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழி படுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்து, சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமன ஆணைகளை வழங்கியும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
காவல்துறையுடன், பள்ளி மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், பொறுப்பு மிக்க மாணவர்களை உருவாக் குவதே சிற்பி திட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்து வருகிறது. மேலும், பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி, சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடாமல் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவர்களை நல்வழிபடுத்தவும், நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டு, தாம் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கும், சிற்பி திட்டம் துவங்கப்பட்டது.
சிற்பி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவர்கள் வீதம், அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் 2,558 மாணவர்கள் மற்றும் 2,442 மாணவிகள் என மொத்தம் 5,000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டும், ஒவ் வொரு பள்ளிக்கும் தலா 2 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டும், ஒவ்வொரு பள்ளியிலும் வாரந்தோறும் புதன்கிழமை மேற்படி மாணவ, மாணவிகளுக்கு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கல்வி சுற்றுலாவாக முக்கிய இடங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், காவல்துறையின் பணிகள், கடமைகள், பொதுமக்கள் தொடர்பு குறித்து எடுத்துரைத்து, மாணவ, மாணவிகள், காவல்துறையின் அங்கமாக செயல்படவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று (07.01.2023) காலை 8.00 மணி முதல் 9.15 மணிவரை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற சிற்பி திட்ட 5,000 மாணவ மாணவிகளுக்கான யோக பயிற்சி வகுப்பை மாண்புமிகு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுடன் யோக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு யோக பயிற்சி செய்தனர். யோக பயிற்சி செய்வதால் உடலில் உறுப்புகள் பலமடைகின்றன. அதனால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பெறுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் நல்ல சிந்தனையுடன் மனம் அலைபாய்வது கட்டுப் படுத்தப் பட்டு, மனதை அமைதிப்படுத்தி சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்க இந்த யோக பயிற்சி வழிவகை செய்யும்.
ஒரே நேரத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5,000 சிற்பி மாணவ, மாணவிகள் யோக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சாதனை படைத்ததற்காக உலக சாதனை யூனியன் (World Records Union), தமிழக இளம் சாதனை யாளர்கள் சாதனை புத்தகம், (Tamilnadu Young Achievers Book of Records), உலக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், (world Young Achievers Book of Records) ஆகிய மூன்று அமைப்பினர், சென்னை பெருநகர காவல் துறைக்கான மேற்படி 3 சான்றிதழ்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் B.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர் திரு.M.ராமமூர்த்தி, (நிர்வாகம்), திரு.K.சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), திரு.M.ராதகிருஷ்ணன், (ஆயுதப்படை-2) திரு.M.கோபால் (மோட்டார் வாகன பிரிவு) World Records Union, Tamilnadu Young Achievers Book of Records, world Young Achievers Book of Records அமைப்பினர், சிற்பி திட்ட ஒருங்கிணைப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.