12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த முக்கிய பாடத் தேர்வை 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கில பாடத்தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தேர்வு துறை அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கிய தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைக்க கல்வி அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார். மேலும் தேர்வு எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி பிடித்து தேர்வுக்கு வரவைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அப்போது மாணவர்களில் சிலர் வெளியூர் சென்றிருப்பதால் தேர்வு எழுதவரவில்லை என தெரியவந்தது. மேலும் பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் சொந்த ஊரிலோ, வெளியிடங்களிலோ பணியில் உள்ளதும் தெரியவந்தது. இதன் காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது.