45 நாட்களில் 57 கஞ்சா குற்றவாளிகள் கைது: திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நடவடிக்கை
சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 45 வழக்குகள் பதிவு செய்து, 57 குற்றவாளிகளை கை செய்து துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் கஞ்சா உள்பட போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive Against Drugs) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த காவல் ஆய்வாளர்கள் துணை ஆணையர்கள் நேரடி மேற்பார்வையில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணை யாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரடி மேற்பார்வையில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் உள்ள உதவி ஆணையாளர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமை யிலான காவல் குழுவினர் கடந்த 45 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனைகள் மேற் கொண்டனர். அது தொடர்பாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 குற்றவாளிகள் போதை விற்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா, 44 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 57 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 19 LSD ஸ்டாம்புகள், 8 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள், 859 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ. 11,130- பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் காவல் குழுவினர் தொடர்ந்து போதை பொருள் மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான சோதனைகள் மூலம் தீவிரமாக கண்காணித்து, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை தொடரும் சென்னை நகர கமிஷனர் அலுவலகம் எச்சரித்துள்ளது.