Take a fresh look at your lifestyle.

36 ஆண்டுக்கு பிறகு 2வது சுற்றுக்கு நுழைந்த மொராக்கோ

93

உலகக் கோப்பை கால்பந்தில் குரோஷியாவுடன் டிரா கண்டதன் மூலம் பெல்ஜியம் அணி 2வது சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி மொராக்கோ 36 ஆண்டுக்கு பிறகு 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இதில் நேற்றிரவு ‘எப்’ பிரிவில் ஒரே நேரத்தில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த ஒரு மோதலில் மொராக்கோ- கனடா அணிகள் சந்தித்தன. வலுவான ஆதிக்கத்தை முதல் வினாடியில் இருந்தே களத்தில் காட்டிய மொராக்கோ அணியினர் 25 நிமிடங்களுக்குள் 2 கோல் போட்டு மிரட்டினர். 4-வது நிமிடத்தில் கனடா கீப்பர் மிலன் போர்ஜன், முன்னேறி வந்து பந்தை தடுத்து விட்டு திரும்புவதற்குள் மொராக்கோவின் ஹகிம் ஸியேச் பந்தை அவரது தலைக்கு மேலாக தூக்கி விட்டு வலைக்குள் செலுத்தினார். 23-வது நிமிடத்தில் யூசெப் என் நெஸ்ரி கோல் போட்டார்.

40-வது நிமிடத்தில் எதிரணி வீரர் அடித்த ஷாட்டை மொராக்கோவின் நயேப் அகுர்ட் தடுக்க முற்பட்ட போது, பந்து அவரது காலில் பட்டு வலைக்குள் பாய்ந்து சுயகோலாக மாறியது. 45-வது நிமிடத்தில் மெராக்கோ மேலும் ஒரு கோல் அடித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது ‘ஆப்-சைடு’ என்று மறுக்கப்பட்டது. என்றாலும் 2- 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த மொராக்கோ அணி அதை இறுதி வரை தக்கவைத்துக் கொண்டு வெற்றிக்கனியை பறித்தது.

அகமது பின் அலி மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை அணியான பெல்ஜியம், தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெல்ஜியம் வீரர்கள் தாக்குதல் தொடுத்தனர். குரோஷிய வீரர்களும் அவர்களுக்கு இணையாக ஈடுகொடுத்து ஆடியதால் நீயா-நானா ? என்று கடும் போராட்டம் குடுமிபிடி நீடித்தது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0- 0) டிராவில் முடிந்தது. நடப்பு தொடரில் கோல் இன்றி முடிந்த 6-வது ஆட்டம் இதுவாகும்.

‘எப்’ பிரிவில் லீக் சுற்று முடிவில் மொராக்கோ 2 வெற்றி, ஒரு டிரா என்று 7 புள்ளிகளுடன் முதலிடமும், குரோஷியா ஒரு வெற்றி, 2 டிரா என்று 5 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து அடுத்த சுற்றை எட்டின. ஆப்பிரிக்க தேசமான மொராக்கோ 2-வது சுற்றுக்குள் கால்பதிப்பது கடந்த 36 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1986-ம் ஆண்டில் மட்டும் 2-வது சுற்றுக்கு வந்திருந்தது. கடந்த ஆண்டு அரைஇறுதி வரை முன்னேறிய பெல்ஜியம் இந்த முறை 4 புள்ளியுடன் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு லீக் சுற்றுடன் வெளியேறியது.