Take a fresh look at your lifestyle.

மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை

37

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் ‘போதைப்பொருள் இல்லா தமிழகம்’ என்ற திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று 9.4.2023 செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் கஞ்சா கடத்தல் தொடர்பாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கஞ்சாவை விற்பனைக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து அத்திப்பட்டுக்கு கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. செங்குன்றம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் மற்றும் போலீஸ் தனிப்படையினர் 9.04.2023 அன்று காலை பட்டமந்திரியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த TN 04 AT 8264 என்ற ஆட்டோவை மடக்கி அதிலிருந்தவர்களை சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பேக்கில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து மீஞ்சூர், அத்திப்பட்டு, மேட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் சில்லறையாக விற்பனை செய்வதாக இருவரும் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதனையடுத்து ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 28), தாழம்பூர் ஆகாஷ் (21), ஆவடி சந்திரசேகரன் (21) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மூவரும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அத்திப்பட்டைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.