2022ம் ஆண்டு 424 பேர் மீது குண்டாஸ்: 1,701 ரவுடிகள் சுற்றி வளைப்பு: கமிஷனர் சங்கர்ஜிவால் தீவிர நடவடிக்கை
கடந்த 2022ம் ஆண்டு கமிஷனர் சங்கர்ஜிவாலின் அதிரடி நடவடிக்கையின் விளைவாக சென்னைப் பெருநகரில் மொத்தம் 1,701 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு 424 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–
ரவுடிகள் ஒழிப்பில் தனி கவனம்:
ரவுடிகளுக்கெதிரான தொடர் நடவடிக்கை தொடர் நடவடிக்கையின் கீழ் ஒவ்வொரு சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் துணை கண்காணிப்பாளர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அரசு ஆணை எண். 521/Home (POL.XII) Department நாள் 20.11.2021ன்படி, கூடுதல் காவல் ஆணையாளர்கள், வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர் தலைமையில் இரண்டு தீவிர குற்றப் பிரிவுகள் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன.
* ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சரித்திரப் பதிவேடு மற்றும் சரித்திரப் பதிவேடு அல்லாத ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க, கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளுக்கெதிராக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிணையில் வெளிவரஇயலா பிடியாணைகளை கண்டறியப்பட்டனர்.
* விசாரணை நிலுவையில்உள்ள கொலை வழக்குகளில் தலைமறைவு ரவுடிகளை தேடிட, கண்டுபிடிக்காத புலன் விசாரணை நிலுவையில் உள்ள / நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர இயலா பிடியாணைகளை செயலாக்கம் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு உதவிட….
* சரித்திரப்பதிவேடு ரவுடிகளின் வகைப்படி (அதாவது ஏ+, ஏ, பி மற்றும் சி) அவர்களுக்கான தரவு தளத்தை (database) பராமரித்தல் மற்றும் அவர்களது செயல்பாடுகளை தொடர்ந்து பதிவேற்றல்…
பிற காவல் நிலைய எல்லையில் உள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் நடமாட்டம் குறித்து தகவல் பெற்று அவர்கள் சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க தொடர்ந்து பி மற்றும் சி வகை ரவுடிகளை கண்காணிப்பதனால், பிற மாவட்ட ஏ மற்றும் ஏ+ வகை குற்றவாளிகளால் உதவி மற்றும் அடைக்கலம் பெறுவதைத் தடுத்தல், புதிய சரித்திரப் பதிவேடுகளை துவக்குதல் இவை தவிர, மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் “குழு குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு”ம், பிற பிரிவுகளிலிருந்து பெறும் தகவல்களை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து, பெருநகர சென்னை காவல் எல்லைக்குள் குழுக் குற்றவாளிகளை கண்காணித்து, உள்ளூர் காவல் அதிகாரிகளை உஷார்படுத்துகிறது….
கொடும் ரவுடிகள் சுற்றிவளைப்பு:
சிடி மணி, காக்கா தோப்புபாலாஜி, எண்ணூர் தனசேகரன், ஆற்காடு சுரேஷ், பி.டி.ரமேஷ் உள்ளிட்ட 74 கொடுங் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 08.05.2021 முதல் நடத்தப்பட்ட வேட்டையில், 547 சரித்திரப் பதிவேடுகள் புதிதாக துவக்கப்பட்டு, மொத்தம் 3,610 சரித்திரப் பதிவேடுகள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகின்றன. DACO (குற்றச் செயல் புரிபவர்களுக் கெதிரான நடவடிக்கை) குற்ற சரித்திரப் பதிவேடு (கேடி) கொண்ட நபர்களை தொடர்ந்து கண்காணித்திட குற்றப் பிரிவு காவலர்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல் புரிபவர்களுக்கெதிரான தனி நடவடிக்கைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு, அதன் விளைவாக 2021 மே மாதத்திலிருந்து, வீடு உடைத்து திருடுபவர்கள் மற்றும் வாகன திருடர்கள் உள்ளிட்ட 5,636 குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 165 நபர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 633 பேர் இறஞ்சிறார் குற்றவாளிகள் ஆவர்.
1,701 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கண்காணிப்பு
இவை தவிர, புதிதாக 270 குற்ற சரித்திரப் பதிவேடுகள் (கேடி) துவக்கப்பட்டு, மொத்தம் 1,701 குற்ற சரித்திரப் பதிவேடுகள் (கேடி) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. DARE, DACO போன்ற சிறப்பு வேட்டைகள் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாகவும், முறையான வாகன ரோந்துக் காவல், வாகனச் சோதனைகள், புலப்படும் காவல் பணி, குற்றம் அதிகம் நடைபெறும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து / சுற்றுக் காவல் மற்றும் அதிகாரிகளால் இரவு ரோந்து சோதனைகள் மூலமாகவும், விசாரணை நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள்ளாகவே விரைவாக மற்றும் திறமையான புலன் விசாரணையின் காரணமாகவும், கொடுங்குற்றங்களின் நீதிமன்ற விசாரணையை கண்காணித்ததன் விளைவாகவும், குற்றவாளிகளுக்கிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு 424 நபர்கள் மீது குண்டர் சட்டம்
2020 (334 நபர்கள்) மற்றும் 2021 (270 நபர்கள்) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2022ம் ஆண்டு, ரவுடிகள் உட்பட 424 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலுக்கு உட் படுத்தப்பட்டனர். இது தவிர, 2020 (2945 நபர்கள்) மற்றும் 2021 (4991 நபர்கள்)ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு 7187 நபர்களுக்கெதிராக பாதுகாப்பு செயல்முறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து எதிர்மறை கண்காணிப்புக்கு வந்துள்ளவர் களுக்கெதிராக பாதுகாப்பு செயல்முறைகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 2020 (74 நபர்கள்) மற்றும் 2021 (164 நபர்கள்) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2022ம் ஆண்டு 344 நபர்கள் பாதுகாப்பு செயல்முறைகளின் கீழ் காவலுக்கு உட் படுத்தப் பட்டுள்ளனர்.
சிசிடிவி கேமராக்கள் மேம்பாடு
சிசிடிவி, மூன்றாம் கண் காவல் பணி ஆகியவை, விரைவாக குற்றங்களை கண்டுபிடிக்கவும், தண்டனை பெற்றுத் தர சிறந்த சாட்சியங்களை அளிக்கவும், பொது இடங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே சிறந்த பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றையும் ஏற்படுத்தியுள்ளன.
போக்குவரத்து ஒழுங்கினை பராமரிக்க சிசிடிவி கேமராக்கள் உதவுகின்றன. எனவே, ஏற்கனவே நிறுவப்பட்ட 60,997 சிசிடிவி கேமராக்களின் அமைவிடத்தை அறிய, பிரத்தியேக அடையாளக் குறியீட்டுன் ஜியோ டேக் (Geo Tag) செய்யப்பட்டுள்ளன.
2021, -2022 நிதி ஆண்டில் 11,468 கேமராக்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்புக்காக அரசால் ரூ. 1.17 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பெருநகரம் மற்றும் பாதுகாப்பான நகரம் திட்டங்களின் கீழ், விளம்பரதாரர்கள் மூலமாக மேலும் 20000 சிசிடிவி கேமராக்களை நிறுவ திட்டமிடப்பட்டு, இவற்றுக்கான இடைவெளி குறித்தஆய்வுகள் முடிவடைந்துள்ளன. கேமராக்களை பராமரிப்பதற்கான ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு அரசால் ரூ. 1.50 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ் 1750 இடங்களில் 5250 கேமராக்களையும், பெரு நகரம் திட்டத்தின் கீழ் 980 இடங்களில் 2939 கேமராக்களையும் நிறுவ பெருநகர சென்னை காவல்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ், முக அங்கீகார மென்பொருள் (150), தானியங்கி பதிவு எண் தகடு அங்கீகாரம் (375) மற்றும் இன்டெக்ஸிங் கேமரா (indexing camera 2250) ஆகியவை நிறுவப்படும். பெரு நகர காவல் பணி திட்டத்தின் கீழ், முக அங்கீகார மென்பொருள் (70), தானியங்கி பதிவு எண் தகடு அங்கீகாரம் (170) மற்றும் இன்டெக்ஸிங் கேமரா (indexing camera 1000) ஆகியவை நிறுவப்படும்.
பறவை திட்டம்:
18,- 24 வயதுள்ள இளைஞர்கள், சிறு, முதல்முறை குற்றவாளிகளின் மறு வாழ்வுக்காக “பறவை” என்ற திட்டத்தின் கீழ், சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவைகள், சமூக பாதுகாப்புத்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், அவர்களது மறுவாழ்வு மற்றும் சமூகத்தின் மறு ஒருங்கிணைப்புக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறார் மற்றும் சிறுமியர் குழுக்கள்
சமூகத்தில் பிறரைப் போன்று உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை சமூக விரோத செயல்களிலிருந்து தள்ளி வைத்து, பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி, அவர்களது ஆர்வங்களை வளர்ப்பதற்காக, 5575 உறுப்பினர்கள் (சிறுவர் -3,720, சிறுமியர் -1,855), 107 சாரணர் தலைவர்கள் மற்றும் 104 பாராமரிப்பாளர்களுடன், 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.