சென்னை, ஜன. 4–
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2022ஆம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. நடப்பு ஆண்டை நிறைவு செய்து, புதிய ஆண்டை வரவேற்கும் இவ்வேளையில், நாம் அடைந்த வெற்றித் தருணங்களை திரும்பி பார்க்கலாம் என டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
* கடந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு சாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறை துப்பாக்கிச் சூடு, கள்ளச்சாராய சாவு அல்லது பெரிய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கப்பட்டது.
* வருடாந்திர முக்கிய நிகழ்வுகளான ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை விழா, விநாயக சதுர்த்தி திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆகியவை அமைதியாக நடைபெற்று முடிந்தன.
* 2022ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 09 வரை மகாபலிபுரத்தில் நடந்த 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என சுமார் 2,000 வெளிநாட்டவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்ததன் காரணமாக போட்டி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது.
* ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 நபர்கள் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டது, நாட்டிலேயே அதிகபட்சமாகும். இந்தக் கடுமையான நடவடிக்கையினால் மாநிலத்தில் திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுக்களின் தீயத் திட்டங்கள் பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளன.
* ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதன் காரணமாக 9,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சட்டவிரோதமாக நடைபெறும் இத்தொழிலில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டு, அமலாக்கப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை என்ற பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் போதைப்பொருள் மற்றும் பிற பொருட்களுக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வேண்டாம் என்ற கருத்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது.
* ஆவடி மற்றும் தாம்பரத்தில் புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நாட்டிலேயே ‘பாதுகாப்பான நகரம்’ என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தலைநகர் சென்னை மாநகரின் பாதுகாப்பை மேம்படுத்தி உள்ளது.
* முதல்வர் ஸ்டாலின் காவல்துறை தலைமையகத்திற்கு 22.09.2022 அன்று நேரில் வந்து காவலர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றதன் மூலம் 1,500 காவலர்களின் குறைகள் ‘உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் தீர்க்கப்பட்டுள்ளன.
* காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இருவாரங்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. இது காவல்துறையினரின் திறனை அதிகரிப்பதோடு, அவர்களின் மன நலனையும் மேம்படுத்தும். மேலும், காவல்துறையினர் தங்கள் நேரத்தை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிடவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
* இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் இரவு ரோந்துப்படி வழங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது இதுவே முதல் முறை.
* பணியின்போது உயிரிழந்த 1,132 காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் காவல் நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டன.
* முதன்மையான சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பில் முதன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், ‘மாநிலங்களில் முதன்மை மாநிலம் -2022′ என்ற விருதை இந்தியா டுடே’ நாளிதழ் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.
- 13. 31.07.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்திய துணை ஜனாதிபதி அவர்கள் தமிழக காவல்துறைக்கு பெருமைமிக்க குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியை வழங்கினார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்கொடியைப் பெற்றுக் கொண்டு காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஒப்படைத்தார்கள்.
* காவல் பணியில் உள்ள பொது பணி நிலைமைகள், காவலர் குடியிருப்பு, காவலர் நலன்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனைகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியாலும் மற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையின்பால் கொண்ட பற்றின் காரணமாகவே சாத்தியமானது.
காவல்துறைப் பணியில் வரும் காலங்கள் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நமது பாரம்பரியம் மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர் தரத்தை பராமரிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு காவல்துறையின் கொடி உயர்ந்து பறந்திட உறுதி ஏற்போம்.
இந்தப் புத்தாண்டு, ஒரு புதிய புத்தகத்தில் எழுதப்பட வேண்டிய ஓர் அத்தியாயமாக நம் முன் உள்ளது. பெரிய இலக்குகளை நிர்ணயித்து அந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு நாம் அனைவரும் உதவிடலாம். தமிழக காவல்துறையில் உள்ள ஒவ்வொர் உறுப்பினருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இந்தப் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.