சென்னை, செப். 6–
தஞ்சை வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருடு போன 2000 பழமை வாய்ந்த நடராஜர் உலோக சிலை 62 ஆண்டுகளுக்கு நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் பழமையான திருவேதிகுடி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற 2000ம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த கோவிலாகும். 1963ம் ஆண்டில் இந்த கோவிலில் நடராஜர் உலோக சிலை திருடு போனது. அது தொடர்பாக வெங்கடாச்சலம் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின்பேரில் ஐஜி தினகரன் மேற்பார்வையில், எஸ்பி ரவி, கும்பகோணம் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்ஐ சின்னதுரை, காவலர் ஜெகதீஸ் ஆகியோர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்பட்டது. இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
திருடுபோன திருவேதிகுடி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருந்த நடராஜர் சிலைக்கு பதிலாக வேறொரு சிலையை வைத்துள்ளனர். மேலும் களவு போன சிலை நியூயார்க், ஏசியா சொசைட்டி மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் பெறப்பட்ட திரிவேதிகுடி நடராஜர் சிலையின் புகைப்படத்தை நியூ யார்க்கில் உள்ள நடராஜர் சிலையுடன் ஒப்பிட்ட போது இரண்டும் ஒன்றுதான் என உறுதிப்படுத்தப்பட்டது. 62 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது அந்த ஊர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.