உலகக்கோப்பை கால்பந்தில் செனகல் அணி ஈகுவடாரை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி கத்தாரை வென்று 2-வது சுற்றை உறுதி செய்தது.
கத்தாரில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து திருவிழாவில், லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு ஒரே நேரத்தில் ‘ஏ’ பிரிவில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் நெதர்லாந்து, கத்தாரை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி 29-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கோடி கேக்போ இந்த கோலை அடித்தார். நடப்பு தொடரில் அவரது 3-வது கோல் இதுவாகும். 49-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பிரெங்கி டி ஜோங், கோல் கீப்பர் தடுத்து திரும்பி வந்த பந்தை வலைக்குள் திணித்து முன்னிலையை வலுப்படுத்தினார். கத்தார் வீரர்களால் கடைசி வரை நெதர்லாந்தின் தடுப்பு வளையத்தை தகர்க்க இயலவில்லை.
முடிவில் நெதர்லாந்து அணி 2- 0 என்ற கோல் கணக்கில் கத்தாரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. ரூ.17 லட்சம் கோடி செலவிட்டு போட்டியை நடத்தும் கத்தார் லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது. லீக் சுற்றில் அந்த அணி 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது. உலக கோப்பை வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடு ஒரு லீக்கிலும் வெற்றி பெறாதது இதுவே முதல் முறையாகும். கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் செனகலும், ‘டிரா’ செய்தாலே போதும் என்ற நிலைமையில் ஈகுவடாரும் மோதின. 44-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை செனகல் வீரர் இஸ்மைலா சர் கோலாக்கி முதல் பாதியில் முன்னிலையை உருவாக்கினார்.
பிற்பாதியில் 67-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை ஈகுவடாரின் மோசஸ் காய்செடோ கோலுக்குள் திருப்பினார். இதனால் ஆட்டம் 1- 1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. ஆனால் அடுத்த 3-வது நிமிடத்தில் செனகலின் கலிடோ கோலிபாலி கோல் போட்டு அசத்தினார். இதே முன்னிலையை கடைசி வரை தக்க வைத்த செனகல் 2- 1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்தில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு அணியை (ஈகுவடார்) ஆப்பிரிக்க நாட்டு அணி (செனகல்) சாய்ப்பது 1990-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
‘ஏ’ பிரிவில் லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த நெதர்லாந்து (2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளி), செனகல் (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இதில் செனகல் 2002-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் 2-வது சுற்றை எட்டியிருக்கிறது. ஈகுவடார் (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி), கத்தார் (3 ஆட்டத்திலும் தோல்வி) அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.