கத்தாரில், உலக கோப்பை கால்பந்து 22வது சீசன் நடக்கிறது. தோஹாவின் அல் துமாமா மைதானத்தில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் செனகல் – நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சமபலத்துடன் மோதின. முதல் பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சிகள் பரஸ்பரம் முறியடிக்கப்பட்டன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டின. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், 83 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கக்போ நேர்த்தியாக கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து தாக்குதலை நெதர்லாந்து வீரர்கள் தீவிரப்படுத்திய நிலையில், கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடத்தில், செனகல் கோல்கீப்பரிடம் இருந்து திரும்பிவந்த பந்தை மீண்டும் கோல் வலைக்குள் தள்ளினார் கிலாசன். இறுதி வரை போராடியும் செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை இதனால் நெதர்லாந்து அணி 2- 0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
அல்-ரய்யானில் உள்ள அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற ‘பி’ பிரிவின் மற்றொரு லீக் போட்டியில் அமெரிக்கா – வேல்ஸ் அணிகள் மோதின. போட்டி தொடங்கி யதில் இருந்தே அமெரிக்கா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கு பலனாக 36வது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தின் நடுவே பாஸ் செய்யப்பட்டு வந்த பந்து திடீரென கிறிஸ்டியன் புலிசிக் வசமானது. அதை அப்படியே லாவகமாக வாங்கி ரைட் விங்கர் திமோதி வே-க்கு தள்ளி விட, அவர் எதிரணியின் பாக்ஸுக்குள் வேகமாக ஓடி அசால்ட்டாக கோல் அடித்தார். இதையடுத்து, பதிலடி கொடுக்க வேல்ஸ் அணி வீரர்கள் தீவிரம் காட்டினர்.
அதன்பிறகு முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியை நோக்கி அமெரிக்கா கனவு கோட்டை ஆரம்பித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வலுவாக டிபன்ஸ் செய்ய யாராலும் கோல் அடிக்க முடியாமல் இருந்தது. இந்த சூழலில் தான் 81வது நிமிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அமெரிக்க அணியின் பாக்ஸுக்குள் நுழைந்து வேல்ஸ் அணியினர் அட்டாக்கிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பந்தை தன்வசம் கொண்டு வர வேல்ஸ் அணியின் ரைட் விங்கர் கரீத் பேல் முயற்சித்தார். அதை வெளியே தட்டி விட அமெரிக்க அணியின் டிபன்டர் ஸிம்மர்மேன் ஓடி வந்தார். அப்போது கரீத் பேலின் கால்களை தட்டி விட நேர்ந்ததால் நடுவர் பெனால்டி கொடுத்து விட்டார். ஒருவழியாக கரீத் பேல் கச்சிதமாக கோலாக மாற்றினார். இதனால் இப்போட்டி 1- 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.