Take a fresh look at your lifestyle.

2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி ஜடேஜாவின் சுழல் பந்தில் வீழ்ந்த ஆஸ்திரேலியா

135

ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி தடுமாறியதால் 2 வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி யில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில், முறையே ஆஸ்திரேலியா 263 ரன்களும், இந்தியா 262 ரன்களும் எடுத் தன. ஒரு ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 39 ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஸ்கோரை மேலும் வலுப்படுத்தும் முனைப்புடன் டிராவிஸ் ஹெட்டும், லபுஸ்சேனும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே ஹெட் (43 ரன்) விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் ஆனார். அடுத்து முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 85 ரன் களுடன் நல்ல நிலையில் தென்பட்டது. இதை வைத்து பார்த்த போது எப்படியும் 200 ரன் களை தாண்டி விடுவார்கள் என்றே தோன்றியது.

இந்த சூழலில் சுமித் (9 ரன், 19 பந்து, ஒரு பவுண்டரி) அஸ்வின் பந்துவீச்சை முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. லபுஸ்சேன் (35 ரன், 50 பந்து, 4 பவுண்டரி) ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். இதன் பின்னர் ஜடேஜா தனது சுழல் வித்தையால் ஆஸ்திரேலியாவை முற்றிலும் சீர்குலைத்தார். ஆஸ்திரேலிய வீரர்களில் பெரும்பாலானோர் சுழற்பந்து வீச்சை முட்டிப் போட்டு ஸ்வீப் ஷாட்டாக அடிப்பதில் தவறிழைத்ததை காண முடிந்தது. இந்த வகையில் 6 பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் இந்த முறை டக்-அவுட் ஆகிப்போனார்.

ஹெட், லபுஸ்சேன் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொட வில்லை. 31.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா மதிய உணவு இடை வேளைக்கு முன்பாக 113 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 28 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 42 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் இன்னிங்சில் அவரது மிகச்சிறந்த பந்துவீச்சு இதுவாகும். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது பங்குக்கு 3 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 115 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1 ரன்) வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார். அதாவது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் லெக்சைடில் வீசிய பந்தை அடித்த போது, அது அருகில் நின்ற ஹேம்ன்ஸ்கோம்ப்பின் காலில் பட்டு விக்கெட் கீப்பர் பக்கம் சென்றது. அதை அலெக்ஸ் கேரி கேட்ச் செய்தார். அடுத்து புஜாரா களம் புகுந்தார்.

ஆடுகளத்தில் வெடிப்பு அதிகமாகி பந்து தாறுமாறாக சுழல்வதை அறிந்த ரோகித் சர்மா தடுப்பாட்டத்திற்கு பதிலாக அதிரடியே சாலச்சிறந்தது என்ற முடிவுடன் மட்டையை தடாலடியாக சுழற்றினார். நாதன் லயன், குனேமேனின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய அவர் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆக நேர்ந்தது. 2-வது ரன்னுக்கு வேண்டாம் என்று கூறியும் புஜாரா வேகமாக ஓடி வந்து விட்டதால் வேறு வழியின்றி ரோகித் சர்மா (31 ரன், 20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) தனது விக்கெட்டை தியாகம் செய்து விட்டு கிளம்பினார். அவரைத் தொடர்ந்து நுழைந்த விராட் கோலி (20 ரன், 31 பந்து, 3 பவுண்டரி), ஸ்ரேயாஸ் அய்யர் (12 ரன்) நீண்ட நேரம் நிற்கவில்லை. ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி முடிந்த அளவுக்கு பலத்த நெருக்கடி கொடுத்தார். ஆனால் ஸ்கோர் குறைவு என்பதால் இந்தியாவின் வெற்றிப்பயணத்தை தடுக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் புஜாரா மனஉறுதியுடன் விளையாடி அணியை கரைசேர்த்தார். அவருக்கு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஒத்துழைப்பு தந்தார். இறுதியில் புஜாரா பந்தை சூப்பராக பவுண்டரிக்கு தூக்கிவிட்டு வெற்றிக்குரிய ரன்னை கொண்டு வந்தார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான ஒரு வெற்றியை பெற்றது. தனது 100-வது டெஸ்டில் ஆடிய புஜாரா 31 ரன்களுடனும் (74 பந்து, 4 பவுண்டரி), கே.எஸ்.பரத் 23 ரன்களுடனும் ( 22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை அறுவடை செய்த சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.