Take a fresh look at your lifestyle.

15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் மாஸ்டருக்கு 1 ஆண்டு சிறை

145

 

சென்னை, மே. 5–

15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுவன், பெரம்பூர், ஜார்ஜ் காலனியைச் சேர்ந்த டியூசன் மாஸ்டர் லோகநாதன் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் டியூசன் படிக்க வந்த சிறுவனிடம் ஆசிரியர் லோகநாதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. அது தொடர்பாக சிறுவனின் தந்தை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் மேற்கு சென்னை இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மேற்பார்வையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து ஆசிரியர் லோகநாதன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. லோகநாதன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ .25 ஆயிரம்- அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாகப் பாராட்டினர்.