15 வயது சிறுமியை கடத்திச் சென்று ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்: உறவுப்பெண் உள்பட 2 பேர் கைது
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்று பணம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய உறவுப் பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் முகமது மீரா லப்பை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று (06.04.2022) காலை பாத்திமா வேனில் பள்ளிக்கு சென்றவர், மதியம் பள்ளி விட்டவுடன் பாத்திமாவை அழைத்துச் செல்லும் வேன் ஓட்டுநர் பாத்திமாவை காணாததால், இது குறித்து பாத்திமாவின் தந்தையிடம் முறையிட்டுள்ளார். பாத்திமாவின் தந்தை முகமது மீரா லப்பை பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, பள்ளிக்கு வந்த பாத்திமா பள்ளி முடித்து சென்றதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் முகமது மீரா லப்பைக்கு செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி மகள் பாத்திமாவை கடத்தி வைத்துள்ளதாகவும் பணம் ரூ. 10 லட்சம் கொடுத்தால்தான் விடுவேன் என்றும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். உடனே முகமது மீரா லப்பை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில புகார் அளித்தார். கடத்தி செல்லப்பட்ட பள்ளி மாணவியை விரைந்து மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன்பேரில், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன், நுங்கம்பாக்கம் உதவி ஆணையாளர் மேற்பார்வையில், ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படையினர் பணம் கேட்டு மிரட்டிய செல்போன் எண்ணின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கடத்தல் பெண்மணி வடபழனியில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் முதலில் 1 லட்சம் கொடுக்க சொல்லி உள்ளார். சிறுமியின் தந்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தை கொடுத்தனுப்பி, வடபழனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்த இஜாஸ் அகமது என்பவரிடம் சிறுமியின் தந்தை பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றார். பின்னர் கடத்தல் பெண்மணி, சிறுமியின் தந்தைக்கு போன் செய்து, உங்களது மகள் பாத்திமா வடபழனியில் உள்ள ஒரு கடை அருகில் விட்டுச் சென்றதாக தெரிவித்ததின்பேரில், தனிப்படையின் ஒரு குழுவினர் அங்கு சென்று சிறுமி பாத்திமாவை மீட்டனர்.
இந்நிலையில், தனிப்படை காவல் குழுவினர் வடபழனி, ஹார்டுவேர்ஸ் கடையின் அருகே ரகசியமாக கண்காணித்து, அங்கு பணத்தை வாங்க வந்த கடத்தல் பெண்மணி மோகசீனா பர்வீன் (33) என்பவரை கைது செய்தனர். கடத்தல் பணம் வாங்குவதற்கு உடந்தையாக செயல்பட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இஜாஸ் அகமதுவும் பிடிபட்டார்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட மோகசீனா பர்வீன் என்பவர் தனது உறவினர் ஒருவரின் குழந்தையை கடத்த திட்டமிட்டு நேற்று (06.04.2022) மேற்படி சிறுமி படிக்கும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றபோது, அந்த குழந்தை பள்ளிக்கு வராததால், பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது, புகார்தாரரின் மகள் பாத்திமா வந்ததால், அவரிடம் பேச்சு கொடுத்து உனது தந்தை அழைத்து வரச் சொன்னதாகக் கூறி சிறுமியை ஏமாற்றி ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (06.04.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி கடத்தல் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு, சில மணி நேரங்களில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ள் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் அறிமுகம் இல்லாத நபர் யாரேனும் அழைத்து செல்ல வந்தால், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து அல்லது தந்தை அல்லது தாயிடம் செல்போனில் பேசி உறுதி செய்த பின்னரே செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.