14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், பாட்டிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமிக்கு, அவரது தாய் மற்றும் பாட்டி ஆகிய இருவரும் பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை கடந்த 2018ம் ஆண்டு தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் போக்சோ, சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதனையடுத்து சிறுமியின் தாய் பழனி பிரியா (38), பாட்டி சாந்தி (56) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று (06.04.2022) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் பழனிபிரியா மற்றும் சாந்தி ஆகிய இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பழனிபிரியாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் கோர்ட் விதித்தது. மேலும் சாந்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் மற்றும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினர்.