2018ம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 13 வயது சிறுமிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ. 5 ஆயிரம்- அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த குதிரை ஓட்டும் செல்வராஜ் (எ) செல்வம், 24 என்பவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டுள்ளார். அது தொடர்பாக சிறுமியின் தாயார் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து போக்சோ, சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தைச்சேர்ந்த செல்வராஜ் (எ) செல்வம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். கடந்த 20.12.2018 அன்று நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (28.02.2022) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த குற்றவழக்கில் தொடர்புடைய செல்வராஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000- அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.