13 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு சான்றிதழ்
COP shankar jiwal Gave Reward to Police personnel
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கடந்த 2019 ஆண்டு தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து வந்த 45 வயது நபர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதற்கு உடந்தையாக பெண் ஒருவரும் இருந்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தி.நகர் அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்ஸ்பெக்டர் கௌசல்யா தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் ஷோபனா முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடந்த 18.07.2022 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் எதிரிகளான 2 நபர்கள் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனையும் மற்றும் ஆண் நபருக்கு ரூ.60,000- அபராதமும், பெண்ணுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கவுசல்யா, ஷோபனா ஆகியோரை கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார்.
* கடைகளில் பூட்டை உடைக்கும் பெங்களூர் கொள்ளையன் கைது
மூசா என்பவர், சென்ன பாரிமுனை, ரத்தன் பஜார் பகுதியில் பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரின் கடை அருகில் முகேஷ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். மூசா மற்றும் முகேஷ் ஆகியோர் கடந்த 01.07.2022 அன்று இரவு அவர்களது கடைகளை பூட்டிவிட்டு மறுநாள் (02.07.2022) காலை கடைக்கு வந்தபோது, இருவரது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, மூசாவின் பொம்மை கடையிலிருந்த பணம் ரூ.1,40,000- மற்றும் முகேஷின் துணிக்கடையிலிருந்து பணம் ரூ.5 லட்சம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து மூசா மற்றும் முகேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில், பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் பொன்பாண்டியன், தலைமைக்காவலர் சார்லஸ், முதல் நிலைக்காவலர் செந்தில்குமார், இரண்டாம் நிலைக்காவலர் சுகுமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் இந்த திருட்டில் ஈடுபட்ட பெங்களூருவைச் சேர்ந்த ஆனந்த் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.3,99,500-, 3 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய Xylo கார், பூட்டு உடைக்க பயன்படும் இரும்பு பொருட்கள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
* கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற நபரை கைது செய்த ஆயுதப்படை காவலர்
சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் சுகுமாறன், என்பவர் கடந்த 18.07.2022 அன்று எழும்பூர் நீதிமன்றத்திலிருந்து கைதிகளை 2 காவல் வாகனங்களில் ஏற்றி புழல் சிறைக்கு கொண்டு செல்லும் கைதி வழிக்காவல் பணியிலிருந்தனர். அப்போது, காவல் வாகனம் பாந்தியன் ரவுண்டானா அருகே வந்த போது, காவல் வாகனத்தை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், காவல் வாகனத்திலிருந்த ஒரு கைதிக்கு கஞ்சா பார்சலை கொடுத்துள்ளனர். இதனை பின்னால் வந்த காவல் வாகனத்தில் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் சுகுமாறன் பார்த்து அந்த நபர்களில் ஒருவரை விரட்டிப் பிடித்தார். எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
* தேனாம்பேட்டை பகுதியில் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற நபர்.
சென்னை, மண்ணடி, மரக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அபுதாஹிர். இவர் ரூ. 4.45 லட்சம் பணத்துடன் கடந்த 09.06.2022 அன்று மாலை 5.40 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் G.N செட்டி சாலை மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த 4 நபர்கள் அப்துல் அப்தாஹிரை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து தேனாம்பேட்டை உதவி ஆய்வவாளர் அருள்ராஜ், தலைமைக்காவலர் பொன்னுவேல் ஆகியோர் சிசிடிவி கேமரா உதவியுடன் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கிழக்கு தாம்பரம் ரகுமான் என்பவரை கடந்த 23.06.2022 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம்- மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகுமான் அளித்த தகவலின் பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகிருந்த ராமநாதபுரம் சாருஹாசன் (எ) சாரு என்பவரையும் 3.07.2022 கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* இன்ஸ்டா மூலம் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட சிறுமி உள்பட 4 பேர் கைது
கடந்த 15.06.2022 அன்று மாலை, கோபாலபுரம் D.A.V.பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும், 19.06.2022 அன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் செல்போனையும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த 2 வழக்குகள் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தலைமைக்காவலர் சிவபாண்டியன், முதல் நிலைக்காவலர் அருண்பாண்டியன், காவலர் மகேஷ் ஆகியோர் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள சுமார் 42 சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றிய தேனாம்பேட்டை விவேக் (எ) குள்ளா, ஜெகன் என்கிற ஜெகதீசன், சரவண பெருமாள் மற்றும் ஒரு 16 வயது சிறுமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 1 ஆப்பிள் ஐபேட், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூ.15,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இன்று (23.07.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.