மதுரை பெருங்குடியில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தென்மாவட்ட பகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று தென்காசியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்று காலை மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, மதுரை பெருங்குடியில் 13 அடி உயரத்தில் சுமார் 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட வெண்கல திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேக்கர் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
மதுரையில் இருந்து விமான நிலையம் செல்லக்கூடிய பெருங்குடி என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலை கடந்த ஒரு வருடமாக கட்டப்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. இந்த சிலை திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.