சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள திமுக மூத்த முன்னோடிகள் 1,040 பேருக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் குறும்பப்பட்டியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர் சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1040 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழி தொகுப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளால் பொற்கிழி வழங்குவதை நான் பெருமையாக கருதி கொள்கிறேன். காரணம் நான் காண கிடைக்காத அண்ணாவையும், பெரியாரையும் உங்கள் வழியாக காண்கிறேன். தி.மு.கவின் அனைத்து இன்ப, துன்பங்களிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்கு மிகப்பெரியது, அவர்களை கௌரவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து எஞ்சி உள்ள பகுதியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும். அதேபோல் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்றபின், இளைஞர் அணி சார்பில் கூடுதலான நிதியாக சுமார் 24 கோடி ரூபாய் வங்கியில் இட்டு வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. அத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை இரு மாதங்களுக்கு ஒரு முறை பெறப்பட்டு, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்கள் நலம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவர் இருந்து வரும் கட்சியின் முதல் எழுத்தான அண்ணாவையே மறந்து அவர் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபர்களுடன் விசுவாசமாக உள்ளார்.
குறிப்பாக அவர் அ.தி.மு.கவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரை முதல்வராக்கிய சசிகலா, ஆட்சிகாலத்தில் உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் என அனைவருக்கும் அவர் விசுவாசம் இல்லாத நிலையில், அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக கவர்னர் உள்ளிட்ட மூவருக்கு மட்டுமே உண்மை விசுவாசியாக இருந்து வருகிறார். தற்போது இடைத்தேர்தலுக்காக ஈரோடு பகுதியில் முகாமிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பெரியாரின் இல்லத்திற்கு சென்று, தனது தன்மானம், சுயமரியாதையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்து வரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பாக செயல்பட்டு, எதிர்வரும் காலத்தில் சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவார், அதற்கு உறுதுணையாக மற்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இருப்பார்கள் என்று தான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக பேசினார்.