சேலத்தில் ஓடும் ரயிலில் 100 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற கேரளா ஆசாமிகள் இருவரை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்கும் பொருட்டு ‘குற்றம்’ கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு கஞ்சா, மெத்தம்பெடமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சேலம், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் காவல் ஆளிநர்களுடன் நேற்று ஷாலிமார் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் மற்றும் ஈரோடு ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தூரத்தில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் டிராவல் பேக்கை சோதனையிட்டனர். அப்போது உள்ளே 100 கிலோ கஞ்சாவை பிரவுன் டேப்பில் சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாா மாநிலத்தைச் சேர்ந்த அனீஸ் (35) மற்றும் பிரெட்டி பிரான்ஸிஸ் (28) என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் இருவரும் கஞ்சாவினை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்து கேரளாவில் விற்பனை செய்ய கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓடும் ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற கேரளா ஆசாமிகளை கைது செய்த டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான தனிப்படையினரை குற்றம் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும் 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல் / புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனவும் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.