Take a fresh look at your lifestyle.

ஹிஸ்டரி ஷீட் ரவுடிக்கு 294 நாட்கள் ஜெயில்: மயிலாப்பூர் துணைக்கமிஷனர் உத்தரவு

DC Mylapore bound down one Geethan for violated 110 CrPC

61

மயிலாப்பூர் துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளியை 294 நாட்கள் சிறையிலடைத்து மயிலாப்பூர் துணைக்கமிஷனர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணி, அயோத்யா நகரைச் சேர்ந்தவர் கீதன் (25). அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவர் மெரினா காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கீதன் கடந்த 06.05.2022 அன்று மயிலாப்பூர் துணைக்கமிஷனர் திஷா மிட்டல் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். இந்நிலையில் கீதன் 15.07.2022 அன்று இரவு ஐஸ்கிரீம் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக, மெரினா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

கீதன் 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய மயிலாப்பூர் துணைக்கமிஷனர் திஷா மிட்டல் அவர் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். கீதன் கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 294 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து நேற்று (23.07.2022) உத்தரவிட்டார்.
அதன்பேரில், எதிரி கீதன் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.