ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 3 1/2 ஆண்டுகளில் 11,000 பேருக்கு ஆஞ்சியோ செய்து சாதனை கல்லூரி முதல்வர் தகவல்
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 11,000 பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி கூறினார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் உலக இருதய தின விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இருதயவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கே. கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி. பாலாஜி இதயநோய் சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனையடுத்து டாக்டர் பாலாஜி பேசியதாவது: ‘‘ஸ்டான்லி மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கான ‘கேத் லேப்’ தொடங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ’ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை மற்றும் ’ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது. நவீன கருவிகளுடன் கூடிய இவ்வகைச் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் உதவியுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அளவுக்கு அதிகமான மது அருந்துதல், புகைபிடித்தல், சீரற்ற உணவு பழக்கங்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், மரபுவழி காரணிகள் உள்ளிட்டவை களால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சீரான உணவு பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இதில் நிகழ்ச்சியில் இருதயவியல் தலைவர் டாக்டர் கே. கண்ணன், துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜமீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.