வேளச்சேரியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை, வேளச்சேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வேளச்சேரி, நேரு நகர், N.S.K நகர் 2வது தெருவில் இளவரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த (10.01.2023) மதியம் வேளச்சேரி, திரௌபதி அம்மன் கோயில் 5வது தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளவரசனின் உறவினர்களான சித்திரை செல்வன் மற்றும் சதிஷ் ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக மேற்படி இளவரசனை ஆபாசமாக பேசி, கத்தியால் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றனர். பின்னர் இளவரசனை அவரது அண்ணன் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேற்படி சம்பவம் குறித்து இளவரசன் கொடுத்த புகாரின்பேரில் வேளச்சேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சித்தாலப்பாக்கம் சித்திரை செல்வன் (36), பெரும்பாக்கம் சதிஷ் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களி டமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட சித்திரை செல்வனுக்கும் அவரது அண்ணன் திருமூர்த்திக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக கடந்த 4 வருடங்களாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், தனது அண்ணன் திருமூர்த்திக்கு ஆதரவாக மேற்படி புகார்தாரர் இளவரசன் என்பவர் செயல்பட்டு வந்ததால், சம்பவத்தன்று சித்திரை செல்வன், சதிஷ் என்பவருடன் சேர்ந்து, மேற்படி இளவரசனை கத்தியால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப் பட்ட சதிஷ் மீது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 1 கொலை முயற்சி மற்றும் 2 அடிதடி வழக்குகள் என 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப் பட்ட சித்திரை செல்வன் மற்றும் சதிஷ் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.