Take a fresh look at your lifestyle.

வேலை வாங்கித்தருவதாக 100 இளைஞர்களிடம்ரூ. 3 கோடி மோடி: பெண் உள்பட 4 பேர் கைது

104

அரசு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி 100 இளைஞர்களிடம் போலியான பணிநியமன ஆணை மூலம் சுமார் ரூ. 3 கோடிக்கும் மேல் மோசடி செய்த பலே பெண் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கோட்டுர்புரத்தை சேர்ந்த அமுதா உள்ளிட்ட பலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். அதில் பள்ளி கல்வித்துறை மற்றும் பல அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடமிருந்து சுமார் ரூ. 3 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு, போலியான பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் சங்கர்ஜிவால்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் தேன்மொழி உத்தரவின் பேரில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை, நன்மங்கலத்தைச் சேர்ந்த ரேணுகா (48) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ரேணுகா அவரது கூட்டாளிகளுடன் ஒன்று சேர்ந்து இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. பள்ளிக் கல்வித்துறையில் ரேணுகா உயர் அதிகாரியாக உள்ளது போன்று போலி அடையாள அட்டையை தயார் செய்துள்ளார். வேலை தேடும் அப்பாவி இளைஞர்களிடம் அந்த போலி அட்டையை காண்பித்து ஏமாற்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 3 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றி பண மோசடி செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த காந்தி (54), நெற்குன்றம் மோகன்ராஜ், தேனி ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். ரேணுகா உள்பட நால்வரும் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களிடமிருந்து ரூ. 3 கோடிக்கும் மேல் பணம் பெற்று அவர்களிடமிருந்து அசல் கல்வி சான்றிதழ்களை பெற்று கொண்டு கேஎம்சி ஆஸ்பத்திரியில் போலியாக மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளனர். மேலும் போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்துள்ளனர்.

சுமார் 100- க்கும் மேற்பட்ட போலியான பணிநியமன ஆணைகள் மற்றும் போலியான அடையாள அட்டைகள், படித்த இளைஞர்களின் சுமார் 70 அசல் கல்விச் சான்றிதழ்கள் மோசடி பணத்தில் வாங்கிய 40 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், தங்க நகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் 23 லட்சம் மதிப்பில் முதலீடு செய்த சொத்து ஆவணம், மற்றும் கைதான மோகன்ராஜ் போலி அடையாள அட்டை மற்றும் 100 க்கும் மேற்பட்ட போலி பணி நியமன
ஆணை தயாரிக்க பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் ஐபேட் ஆகியவைகள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மோசடி செயலுக்கு ரேணுகா உள்ளிட்டோர் பயன்படுத்திய 10 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, அதில் ரூ. 5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிறப்பான முறையில் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த கலாராணி மற்றும் தனிப்படை போலீசாரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.