திருப்பூரில் இருந்து வெளிநாட்டிற்கு பார்சல் மூலம் கடத்தப்படவிருந்த 3 கிலோ எபிடெரின் போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பறிமுதல் செய்து அது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு விமான பார்சல்கள் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் மத்திய போதைப்பொருள் மதுரை கிளை மண்டல அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பார்சல் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 17ம் தேதி திருப்பூரில் உள்ள ஒரு பார்சல் நிறுவனத்தில் சந்தேகத்தின் பேரில் வந்த பார்சல்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆஸ்திரேலியா முகவரி இட்ட பார்சலில் 56 நகைப்பெட்டிப்போன்ற பார்சல்கள் இருந்தது தெரியவந்தது. பெட்டிக்குள் பவுடர் வடிவிலான பொருட்கள் வெளியில் இருந்து பார்த்தால் எளிதில் தெரியாதபடி பதுக்கப்பட்டிருந்தது. அவை அத்தனையையும் முழுமையாக பிரித்துப்பார்த்த போது உள்ளே 3 கிலோ 18 கிராம் எடையுள்ள எபிடெரின் போதைப்பொருள் இருப்பதை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அவற்றை ஆஸ்திரேலியாவிற்கு பார்சல் நிறுவனத்திற்கு அனுப்பிய நபர் யார் என்று சோதனை செய்த போது அனுப்புநர் பகுதியில் அவை அனைத்தும் போலியான பெயர் முகவரி மற்றும் செல்போன் நம்பர்கள் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அந்த பார்சலை கொண்டு சென்ற நபர் குறித்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பார்சல் நிறுவனத்தில் அது பதிவு செய்யப்பட்ட நேரம் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை வைத்து மேற்கொண்ட விசாரணையில் அதனை அனுப்பிய நபரை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த 24ம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ விமானம் மூலம் சிங்கப்பூருக்கு தப்பிச்செல்லவிருந்த மற்றொரு நபரையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:– கொரோனா லாக்டவுன் சமயத்தில் இந்த எபிடெரின் கடத்தல் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இவை ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ் மூலம் கடத்துவதை போதை ஆசாமிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். போலியான முகவரி, செல்போன் எண்கள் மூலம் அனுப்புகின்றனர். இவர்களை கண்ணும் கருத்துமாக கண்காணித்து போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.