வீட்டுக்குள் வைத்து போதைப்பொருள் தயாரித்த கும்பல் கூண்டோடு கைது: வடசென்னை இணைக்கமிஷனர் ரம்யாபாரதி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை
ஆந்திராவிலிருந்து மெத்தம்படமைன் போதை பொருட்கள் வாங்கி பதுக்கி வைத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 860 கிராம் எடை கொண்ட மெத்தம்படமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வடசென்னை இணைக்கமிஷனர் ரம்யாபாரதியின் தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யபாரதி தனிப்படையைச் சேர்ந்த காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை காவல் குழுவினர் கடந்த 06.03.2022 மதியம் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி.நகர், இரயில் நிலையம் அருகில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக பையுடன் வந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார், சந்தேகத்தின்பேரில், அவரது பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா மற்றும் போதை பவுடர் வைத்திருந்தது தெரியவந்தது. அவர் பெயர் ரோஹித் மணிகண்டன் (26) என்றும், புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் எடை கொண்ட மெத்தம்படமைன் என்ற போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரோஹித் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ரோஹித் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் பேரில் தனிப்படை காவல் குழுவினர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த காதர் மொய்தீன் (28) என்பவரை நேற்று (08.03.2022) மதியம் கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் எடையுள்ள மெத்தம்படமைன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் காதர் மொய்தீன் ஆர்.கே.நகரை சேர்ந்த நாகூர் ஹனீபா என்பவரிடம் மேற்படி மெத்தம்படமைன் போதை பொருளை வாங்கி, ராயபுரம், ஆர்.கே. நகர், திருவொற்றியூர் மற்றும் வட சென்னையின் பிற பகுதிகளில் உள்ள மற்ற விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளனர். அதனடிப்படையில் தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து நேற்று (08.03.2022) மாலை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் மெத்தம்படமைன் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் நாகூர் ஹனிபா, அம்பத்தூரை சேர்ந்த ஷேக் முகமது, இராயபுரம், காஜா நவாஸ், மண்ணடியைச் சேர்ந்த தமீம் (எ) ரசுல்லா ஆகியோரிடமிருந்து மெத்தம்படமைன் போதை பொருளை வாங்கி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். அதனடிப்படையில் காவல் குழுவினர் மண்ணடியைச் சேர்ந்த தமீம் ரசுல்லா என்பவரை பிடித்து அவரிடமிருந்த மெத்தம்படமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஷேக்முகமது என்பவரது வீட்டில் காவல் குழுவினர் சோதனை நடத்தி அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மெத்தம்படமைன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள ஷேக் முகமது என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமான தேடிவருகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மேற்கூறிய நபர்களுக்கு தொடர்ந்து மெத்தம்படமைன் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை காவல் குழுவினர் ஓங்கோலுக்குச் சென்று விசாரணை செய்து ரமேஷ் வீட்டிற்குப் பின்னால் மெத்தம்படமைன் தயாரிக்கும் ஆய்வகத்தை கண்டுபிடித்து ரமேஷின் உதவியாளர் வெங்கட் ரெட்டி (28) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தலைறைவாகியுள்ள ரமேஷ் என்பவரை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட காதர் மொய்தீன் மற்றும் நாகூர் ஹனிபா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஷேக் முகமது மற்றும் வெங்கட்ரெட்டி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வடசென்னை பகுதிகளில் மெத்தம்பட்டமைன் போதை பொருள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை காவல் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.