Take a fresh look at your lifestyle.

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்படைந்தவர்களுக்கு ரூ. 4,800 நிவாரணம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

96

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘தமிழக முதல்வரின் நேரடி தலையீட்டால், சென்னையில் இன்று எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை. மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் இன்று கடலூர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரும், மயிலாடுதுறையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரும் நிவாரணப் பணிகளை கவனித்து வருகிறார்கள்.

முதல்வர், அமைச்சர்கள் நேரடியாக களத்தில் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். தற்போது வீடுகளுக்கு தண்ணீர் புகுந்திருந்தால் ரூ.4800, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000, பகுதி சேதமடைந்திருந்தால் ரூ.4100, கான்கிரீட் கட்டடங்கள் இடிந்திருந்தால் ரூ.95,000ம், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவராணம் வழங்கவும் விதி உள்ளது. தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

இந்த வரையறைப்படிதான் அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. முதல்வரின் ஆய்விற்குப் பின் இந்த தொகைகளை உடனடியாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு, கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் பணிகள் செய்யப்படும். கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 52 ஆயிரத்து 751 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அந்தப் பணிகளை செய்து வருகிறது. எதிர்வரும் மழையை சமாளிக்க உரிய ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக தற்போது மழையை எதிர்கொண்டது போல, திறமையாக வரும் மழையையும் எதிர்கொள்வோம்” என்று அவர் கூறினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் அறிவுரையின் பேரில் பின்வரும் முனனெச்சரிச்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்களும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டன. ஆக மொத்தம் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டன.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பொதுமக்களது புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்கியது. கனமழையின் காரணமாகவும், அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ள காரணத்தாலும், ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில், சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. வயல்வெளியில் தேங்கியுள்ள மழை நீர் தற்போது வடிந்து வரும் நிலையில், பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.