Take a fresh look at your lifestyle.

வியாசர்பாடியில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்: கோர்ட் தீர்ப்பு

VIYASARPADI WIFE MURDER CASE: LIFE SENTENCE FOR HUSBAND

91

கடந்த 2020ம் ஆண்டு எம்.கே.பி.நகர் பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் – அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை, எம்.கே.பி.நகர், 17வது மேற்கு குறுக்கு தெரு, முகவரியில் வசித்து வந்த சார்லஸ் ராஜ்குமார் (வயது 31). இவரது மனைவி ரமணி (வயது 35). இவரை கத்தியால் தாக்கி கொலை செய்தது தொடர்பாக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சார்லஸ் ராஜ்குமார் ரமணியின் நடத்தையின் சந்தேகப்பட்டு அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், 21.07.2020 அன்று மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட்டு, தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில் எம்கேபிநகர் போலீசார் சார்லஸ் ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. எம்.கே.பி.நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரி சார்லஸ் ராஜ்குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 302 கொலை வழக்குப் பிரிவின் படி ஆயுள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், 498 (எ) இ.த.ச. பிரிவிற்கு 3 வருடங்கள் சிறைதண்டனை, ரூ. 5 ஆயிரம்- அபராதமும், 506 (ii) இ.த.ச. பிரிவிற்கு 7 வருடங்கள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம்- அபராதமும், இவையனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என மொத்தம் ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூ.20,000/- அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த எம்.கே.பி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினர்.