திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து 7 விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் இன்று திருச்சி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 35 பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பிரத்தியேகமாக வைத்து தீவிர சோதனை மேற்கொண்டதில் அவர்களிடம் சுமார் 15 கிலோ தங்கம் இருந்து தெரியவந்துள்ளது. அனைத்து விமானங்கள் மற்றும் பயணிகளிடம் நடைபெற்ற இந்த சோதனை நேற்று இரவு முதல் இன்று பகல் வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் இதுவரை மொத்தம் 15 கிலோ தங்கம், பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 8 கோடி என்று தெரிகிறது.