தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக நடத்துவது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு தலைமயில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பொதுமக்கள் நீர்நிலைகளில் கரைப்பார்கள். அந்த சமயத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை எப்படி அமைதியாக நடத்துவது என்பது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் காணொளி வாயிலாக சிறப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசு வகுத்துள்ள வழிமுறைகளின் படி விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிப்பது, நிறுவப்பட்ட சிலைகள் கரைக்கப் படும் வரை பாதுகாப்பு அளிப்பது, விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது தொடர்பாக விரிவாக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனைகளை வழங்கினார். எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் துறையினருக்கு உறுதுணையாக ஆயுதப்படைக்காவலர்களையும், 10, 000 பயிற்சி காவலர்களையும், தற்போது பயிற்சி முடித்துள்ள 900 உதவி ஆய்வாளர்களையும், ஊர்க்காவல் படையினரையும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.