Take a fresh look at your lifestyle.

விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: தியேட்டர் நிர்வாகிகளுக்கு ஆவடி கமிஷனர் எச்சரிக்கை

92

பொங்கல் பண்டிகை சமயங்களில் விதிமுறைகளை மீறினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் நாளை ரிலீஸ் ஆகின்றன. இதனையொட்டி ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விஜய், அஜித் படங்கள் வெளியாகவுள்ள தியேட்டர்களில் கட்அவுட்டுக்கள் பேனர்கள் வைத்து வருகின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்களிடையே பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது. அதனையடுத்து ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சார்பில் ஆவடி காவல் ஆணையரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில புதிய படங்கள் வெளியாக உள்ளன. ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்ற ரசிகர் மன்றங்களுடன் மோதலுக்கு இடம் கொடுக்காமல் திரையரங்குகளில் முறையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். விபத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி பெரிய அளவிலான கட் அவுட்கள், பேனர்கள் அமைக்கக் கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், திரையரங்கு நிர்வாகம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.