விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 12 பீகார் சிறுவர்கள் மீட்பு: மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நடவடிக்கை
சென்னை, மாதவரத்தில் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த ஆதரவற்ற 12 சிறுவர்கள் சென்னை, மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரியின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மதரஸாவில் பீகாரைச் சேர்ந்த சிறுவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக சைல்டு ஹெல்ப்லைன் மூலம் மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஷ்வரிக்கு தகவல் வந்தது. கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நேரடி மேற் பார்வையில் மாதவரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற ஏழை குழந்தைகள் 12 வயதுக் குட்பட்ட 12 சிறுவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர். இலவச கல்வி தருவதாக சொல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல், சரியான நேரத்துக்கு உணவு எதுவும் தராமல் அடித்து கொடுமைப் படுத்தப் பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் 12 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டு குழந்தைகள் நலவாரியம் மூலம் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து மாதவரம் போலீசார் மதரசாவை நடத்தி வந்த நிர்வாகிகள் அக்தர் மற்றும் அப்துல்லா ஆகியோர் மீது 342 (தவறான நோக்கத்துடன் சிறை வைத்தல்), 323 (அடித்து காயப்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்களை கொண்டு தாக்குதல்), குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவர்களை மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு நேற்று சென்று நேரில் பார்த்தார். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களுக்கு சாக்லெட் மற்றும் உணவுகள் வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினார். மேலும் சிறுவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களை பீகார் அனுப்பி வைப்பதற்கும் மாதவரம் போலீசார் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.