நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் முன் அனுமதி பெறாமல் யானை களைப் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் அப்படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்புக்கு யானைகள் கொண்டு வரப்பட்டது. அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே நின்று கொண்டு அங்குள்ள மக்களிடம் யானைகள் குறித்த நேர்காணல் செய்து வந்தனர். இந்தத் தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தாக்குதல் நடத்திதாக சொல்லப்பட்டது. படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை உறுதி செய்யவே சென்றோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பதிவு செய்யவில்லை என்று அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது. ‘வாரிசு’ திரைப்படத்தில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகளைப் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை அளிக்குமாறு வாரிசு தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.