Take a fresh look at your lifestyle.

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 404 ரன்னில் இந்தியா ஆல்அவுட்

112

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி புஜாரா, ஸ்ரோயாஸ் அய்யர், அஸ்வின் அரைசதத்தால் 404 ரன் எடுத்தது.

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் அஸ்வின், அக்‌ஷர் பட்டேலுடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், சுப்மான் கில்லும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முதல் 13 ஓவர்கள் சமாளித்த இவர்கள் ஸ்கோர் 41 ஆக உயர்ந்த போது பிரிந்தனர். சுப்மான் கில் 20 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாமின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். லோகேஷ் ராகுலுக்கு (22 ரன்) கலீல் அகமது வீசிய பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி (5 பந்தில் 1 ரன்) தைஜூல் இஸ்லாமின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

48 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த இந்திய அணியை புஜாராவும், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் 46 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன், ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்தார். பொறுப்புடன் ஆடிய இவர்கள் ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினர். புஜாரா (90 ரன், 203 பந்து, 11 பவுண்டரி) தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் தடுப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது ஏமாந்து ஸ்டம்பை பறிகொடுத்தார். புஜாரா- ஸ்ரேயாஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த அக்‌ஷர் பட்டேல் 14 ரன்னில் கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ‘அவுட்’ ஆனார்.

இந்தியாவின் 7-வது விக்கெட் 293 ரன்னில் விழுந்தது. 8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2 ஓவரில் 300 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வின் அரைசதம் அடித்தார். 91 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 87-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 13-வது அரைசதமாகும். இருவரும் சிறப்பாக ஆடியதால் இந்தியா தொடர்ந்து ரன்களை குவித்தது. 131 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்து இருந்தது. அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சிராஜ் 4 ரன்னில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்னில் ஆல் அவுட் ஆனது.