Take a fresh look at your lifestyle.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 20, 21ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

70

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 20,21ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் கூறுகையில், ‘‘இன்று காலை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ந்தேதி வாக்கில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தமிழக புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று முதல் 19 ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 20ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21 ந்தேதி வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 19 ந்தேதி வரை அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 20 மற்றும் 21 ந்தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநதி அணை 9 செ.மீ., கன்னடியன் அணைக்கட்டு, திருநெல்வேலி தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 4 செ.மீ., செங்கோட்டை, பாளையங்கோட்டை, பெருஞ்சாணி அணை தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.