ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற இரண்டு கொள்ளையர்களை சென்னை பள்ளிக்கரணை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்டனர்.
சென்னை, பள்ளிக்கரணை, பெரியார் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்வரி (30). இவரது 4 வயது மகன் கிரிஷ். அதே பகுதி மனோகர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். நேற்று மதியம் 12.30 மணியளவில் தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு நடந்து வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சரடை அறுத்துக் கொண்டு தப்பி யோடி விட்டனர். அது தொடர்பாக மகேஷ்வரி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பள்ளிக் கரணை துணை கமிஷனர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில், சேலையூர் உதவிக் கமிஷனர் முருகேசன், குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடினர். போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷ்வரியிடம் செயினை அறுத்தது சென்னை அசோக்நகரைச் சேர்ந்த முகேஷ் (எ) பேய் முகேஷ் (32), மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விக்கி (எ) சிட்டா(18) என தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வடபழனியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 சவரன் தாலி சரடு மற் றும் செயின் பறிப்பில் ஈடுபட்ட வைத்திருந்த யமகா இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். திறம்பட செயல்பட்டு 24 மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.