Take a fresh look at your lifestyle.

ரூ. 678 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

55

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.678 கோடியில் திட்டங்கள் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி செலவில் 60 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், 351 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 315 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். அதேபோல 23 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தோம். 1 லட்சத்து 3 ஆயிரத்து 321 பயனாளிகளுக்கு 303 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறோம். தற்போது மட்டும் மொத்தம் 678 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கட்ட 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தினமும் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மோகனூர் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ராசிபுரத்தில் 1300 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட உள்ளது உள்பட பல்வேறு அரசு திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். இந் நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சிறப்பு திட்ட செயலாக்கத்தின் அரசு சிறப்பு செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன், கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக முகமை) சிவக்குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.